Home > எங்களைப் பற்றி

எங்களைப் பற்றி

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இக்குழு சமூக அமைப்புகளின் ஆதரவுடன் தமிழ்மொழி தொடர்பான பலதரப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துவருகிறது. இந்த நடவடிக்கைகள், தமிழ்மொழி கற்பதற்கும் கற்பிப்பதற்கும் துணைபுரிவதோடு தமிழ்மொழிப் பயன்பாட்டை வகுப்பறைக்கு அப்பால் பயன்படுத்தவும் உதவுகின்றன. இக்குழு, சமூகத்திடையே தமிழமொழிப் பயன்பாட்டை மேம்படுத்தப் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் தமிழ்மொழியை வெவ்வேறு சூழமைவுகளில் பயன்படுத்திப் பயனுறும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது; மேலும், புத்தாக்க முறையில் தமிழார்வத்தைத் தமிழ்ச் சமூகத்தினரிடையே நிலைநாட்ட முனைகிறது; இதன்வழி, தமிழ் மரபோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்திக்கொள்ளவும் பல முயற்சிகள் எடுத்துள்ளது.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு வருங்காலத் தலைமுறையினரிடையே தமிழை வாழும் மொழியாக நிலைநாட்ட முனைகிறது; அதோடு, உலகமயமாகும் இக்காலக்கட்டத்தில், பல்லினக் கலாசாரம் கொண்ட சிங்கப்பூரின் அடையாளத்தைக் கட்டிக்காத்துத் தமிழை ஒரு துடிப்புமிக்க மொழியாக வைத்திருக்கும் நோக்கில் இக்குழு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே, நாடெங்கும் தமிழைக் கொண்டுசேர்க்கவும் அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறது.