Home >
நிகழ்வுகள் >
2024 >
MOST INSPIRING TAMIL TEACHERS' AWARD 2024 (MITT)
MOST INSPIRING TAMIL TEACHERS' AWARD 2024 (MITT)
Speech by Minister Shanmugam, Minister for Home Affairs and Minister for Law at the Most Inspiring Tamil Teachers' Award 2024
2024-ஆம் ஆண்டின் நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர் அமைச்சர் திரு கா. சண்முகம் அவர்களின் உரை
1. "தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத்தமிழ் இன்பத்தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்”
சொன்னவர் பாவேந்தர் பாரதிதாசன்.
2. நாம் பார்ப்பதற்குச், சிந்திப்பதற்குப், பழகுவதற்கு இரண்டு அடித்தளங்கள்: ஒன்று பெற்றோர், இரண்டாவது ஆசிரியர்கள். கடிகாரம் ஓய்வின்றி உழைப்பதைக் கற்பிக்கிறது. நாள்காட்டி நாளொன்று கழிகிறது என்பதை நினைவூட்டுகிறது. கற்றல் என்பது பள்ளியோடு முடிவதல்ல. அது ஒரு தொடர்கதை. அந்தத் தொடர்கதையின் தொடக்கம்; அடித்தளம் ஆசிரியர்கள். அதுவும் மொழியில் கற்றல். மொழியைக் கற்றல் என்பது முதல் பணி; முதன்மைப்பணி.
3. மூலமொழி. முதல்மொழி. தாய்மொழி – தமிழைக் கற்பிக்கும் தமிழாசிரியர்ப்பணி தலைசிறந்த பணி. தலைசிறந்த தமிழ்ப்பணியாற்றும் தமிழாசிரியர்களுக்கு என் தமிழ்வணக்கம்.
4. கல்வி அமைச்சின் கல்வித்துறைத் தலைமை இயக்குநர் திருமதி லியூ வெய் லி, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் துணைத்தலைவர் முனைவர் சந்துரு, சிங்கப்பூர் எஸ்பிஎச் தலைமை நிர்வாக அதிகாரி, திரு சான் யெங் கிட், எஸ்பிஎச் மீடியாவின் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் முதன்மை ஆசிரியர் திரு வோங் வெய் கோங், தமிழ் முரசின் ஆசிரியர் திரு ராஜசேகர், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் திரு தனபால்குமார், சமூகத் தலைவர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், ஆசிரியர்கள், குடும்ப உறுப்பினர்கள், மாணவர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கம்.
5. 2024-ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுவழங்கும் விழாவில் பங்கேற்பதில், உங்களோடு இணைவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். மாணவர்கள்மீதும் தாய்மொழிமீதும் தமிழின்மீதும் அன்பும் அக்கறையும் காட்டி தனித்தன்மையுடன் விளங்கும் ஆசிரியர்களைப் பாராட்ட; வாழ்த்த இங்கு நாம் எல்லோரும் கூடியிருக்கிறோம்.
6. ஆசிரியர்கள் ஆலமரங்கள் போன்றவர்கள். இன்றைய கருப்பொருளும் அதுதான். இலைகளாலும் கிளைகளாலும் உறுதியான விழுதுகளாலும் நிழல்தந்து ஆதரவு வழங்குவதுபோல் மாணவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து கல்வியில் சிறந்துவிளங்க அவர்களுக்கு அரவணைப்பும் நல்கி வழிகாட்டுபவர்கள், ஆசிரியப்பெருமக்கள்.
7. ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது. உங்களில் சிலர் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
"ஆலமரம் போல நீ வாழ்க
அங்கு ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட"
8. இனிய பாடல்; எழுதியவர் ஆலங்குடி சோமு. அவர் பாடியதுபோல, ஆலமரம்போல ஆசிரியர்கள் வாழ வேண்டும். அவர்களிடம் ஆயிரம் ஆயிரம் மாணவர்கள் பயில வேண்டும்; பயன்பெற வேண்டும். காலமகள் உங்களைத் தாலாட்ட வேண்டும். உங்கள் கல்விச்சேவையை நாடும் நாங்களும் பாராட்ட வேண்டும், என மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
9. ஆசிரியர்களுக்குச் சிறப்பும் பெருமையும் சேர்க்க அவர்களுடைய அரிய உழைப்பை, அர்ப்பணிப்பைப் பாராட்ட செப்டம்பர் திங்களில் ஆண்டுதோறும் ஆசிரியர்தினம் கொண்டாடப்படுகிறது.
10. ஒரு நாட்டிற்கு நல்ல எதிர்காலம் உருவாக; நல்ல குடிமக்கள் உருவாக; அடிப்படையாக விளங்கும் ஆசிரியப்பெருமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்கிறேன்.
11. இவ்வாண்டு நல்லாசிரியர் விருதுக்கு முன்மொழியப்பட்டவர்களுக்கும், விருது பெறுபவர்களுக்கும் அவர்களது பள்ளிகளுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.
12. கடந்த 23 ஆண்டுகளாக 200-க்கும் அதிகமான ஆசிரியப்பெருமக்கள் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமையாகும். அதற்குக் காரணமாகச் செயல்படும் தமிழ்முரசுக்கும், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்திற்கும், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவிற்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
13. இன்றைய நவீன உலகம் அதிவேகமான மாற்றங்களையும், சவால்களையும், நிச்சயமற்ற பொருளாதாரச் சூழல்களையும், நாடுகளுக்கிடையே நிலவும் பூசல்களையும், சந்திக்கும் உலகமாக இருக்கிறது.
14. இந்தச் சூழலில் நுட்பமாகச் சிந்திப்பவர்களாகவும் கருத்துப்பரிமாற்றம் செய்பவர்களாகவும் தங்களைத் தயார்நிலையில் வைத்துக்கொள்பவர்களாகவும் மாணவர்கள் விளங்கவேண்டியது அவசியம். ஓவியம்தரும் ஓவியனைப்போல சிலையைச்செதுக்கும் சிற்பியைப்போல காவியம் படைக்கும் கவிஞனைப்போல நாளைய மாணவர்களை நாட்டுக்கு வழங்கும் உறைவிடம் நீங்கள்; உளைக்கலம் நீங்கள்; உந்துசக்தி நீங்கள்.
15. அண்மையில் 'டெக் கீ' சமூக மேம்பாட்டுக் கழகத்தினது கல்வி விருது வழங்கும் விழாவில் உடல் அளவிலும் உள்ளத்தளவிலும் வலிமையாகச் சவால்களை எதிர்கொள்வதன் அவசியத்தை மாணவர்களிடம் மூத்த அமைச்சர் லீ சியன் லுங் எடுத்துரைத்தார். ஏட்டுக்கல்வி மட்டும் போதாது என்றும் ஒருவர் பட்டம்பெற்ற 5 அல்லது 10 ஆண்டுகளில் படித்தவற்றை மறக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
16. ஆனால், நல்ல பண்புகள் ஒருவரை இறுதிவரை காப்பாற்றும் என்றும் கூறினார். இப்பண்புகளைப் புகட்டுபவரே நல்லாசிரியர். நல்லாசிரியர்களே மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் முன்னோடியாவர்; முன்மாதிரி ஆவர்.
17. மனிதப்பண்புகளை, அறங்களை, வாழ்க்கைக்குத் தேவையான திறன்களைத் தமிழ்மொழியோடு கற்பிப்பது முக்கியமாகும். தமிழ்மொழியைக் கற்பிப்பதோடு நின்றுவிடாமல் விழுமியங்கள், மரபு, பண்பாட்டுக்கூறுகளையும் கற்பிப்பது தமிழாசிரியர்களின் கடமையும் தனித்தன்மையும் ஆகும்.
18. மாறிவரும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது. அம்மாற்றங்களைச் சமாளிக்கும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும்; மாணவர்கள் உருவாக வேண்டும். அதற்கு, ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக்கொண்டே இருப்பது மிக அவசியமாகும்.
19. விருதுபெறும் ஆசிரியர்கள்:
(அ) திருமதி ஜெயசுதா
i. அவ்வகையில் இவ்வாண்டு நல்லாசிரியர் விருதுபெறும் செங்காங் தொடக்கப்பள்ளிப் பாடத்திட்டத்தலைவர் திருமதி ஜெயசுதா தனித்தன்மையுடன் விளங்குகிறார்.
ii. நன்னெறிகளையும் பண்பாட்டுக்கூறுகளையும் கதைகள்வழி தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆர்வத்தை ஊட்டும் வகையில் கற்பிக்கிறார். எடுத்துக்காட்டாக, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி திருவள்ளுவர், ஔவையார் போன்ற புகழ்பெற்ற பழந்தமிழ்ப்புலவர்களுடன் மாணவர்கள் உரையாடுவதுபோல் காட்சிகளை உருவாக்கி கற்பித்தலில் ஆர்வத்தைத் தூண்டுகிறார்.
iii. மெய்ந்நிகர் (Augmented Reality) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வகுப்பறையில் இருந்தபடியே மாணவர்கள் உலகின் ஏழு அதிசயங்களைச் சுற்றிப்பார்க்க வகைசெய்தார். அனுபவப்பூர்வ கற்றல் முறையை வகுப்பறையில் கடைப்பிடிப்பவர் திருமதி ஜெயசுதா. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
(ஆ) திருவாட்டி ஜைனுல் பானு
i. மூத்த ஆசிரியர் திருவாட்டி ஜைனுல் பானு. டேயி உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றுகிறார். இவர் பதின்ம வயதினரின் விருப்பங்களை அறியமுனைகிறார்.
ii. இக்கால இளையர்களின் விருப்பங்களை மனதிற்கொண்டு தம் வகுப்பில் தமிழ்சார்ந்த தகவல்களைத் திரட்ட, பொருத்தமான சமூக ஊடகங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறார். எடுத்துக்காட்டாக, கற்பித்தலுக்குத் துணைபுரியும் சமூக வலைத்தளங்களை அறிமுகப்படுத்திக் கிடைக்கும் தகவல்களைக்கொண்டு சுயமாக வானொலி விளம்பரங்களை உருவாக்குவதற்கு வழிசெய்கிறார்.
iii. திருக்குறளின் நன்னெறிகளை ஒளிக்காட்சி உருவாக்கத்திற்கும் தகவல்களைத் திரட்டுவதற்கும் மாணவர்கள் தம் குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஈடுபடுத்துவதுடன் பொருத்தமான நேர்காணல் கேள்விகளையும் கேட்பதில் முனைப்புடன் செயல்படுகிறார். மாணவர்கள் தாம்பெறவேண்டிய முழுமையைப் பெறும்வரை (அடைவு நிலைகளை எட்டும்வரை) வேறுபடுத்தப்பட்ட மதிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்தி ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் வழங்கிவருகிறார். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
20. வாழ்நாள்சாதனையாளர் விருது
(அ) கற்பித்தலில் முன்னோக்கிச்செல்லும் பாதையைத் தொடர்ந்து வகுக்கும்போது முன்னோடி ஆசிரியர்கள் அமைத்த அடித்தளத்தை நாம் என்றும் மறந்துவிடக்கூடாது. அந்த வகையில் நமது முன்னோடி ஆசிரியர்களுள் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச்சிறப்பிப்பதில் பெருமைகொள்கிறோம்.
(ஆ) வாழ்நாள் சாதனை விருதைப்பெறுபவர், முனைவர் ஜெயராஜதாஸ் பாண்டியன். இசையில் நாட்டமுடையவர். பாடும் திறன் பெற்றவர். கண்ணதாசன் பாடல்களால் ஈர்க்கப்பட்ட இவர் இசையைத் தம்பாடங்களில் இணைத்துக்கொண்டு பாடல்கள்வழி மாணவர்களது மனத்தில் மொழியின் உணர்வை ஆழமாகப் பதியச்செய்தவர்.
(இ) பாடல்களுக்கு மாணவர்களின் மனத்தை எளிதில் கவரும் ஆற்றல் உண்டு என்பதை உணர்ந்த முனைவர் தாஸ் அவர்கள் 1983-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பாடத்திட்ட மேம்பாட்டுக்கழகத்தில் சிறப்பு எழுத்தாளராகப் பணியாற்றியவர். அப்போது பாடநூல்கள் மற்றும் பயிற்சிநூல்களை உருவாக்கியதோடு பாடல்களுக்கும் இசையமைத்தவர்.
(ஈ) 1987-ஆம் ஆண்டில் குடியியல் அறநெறிக் கல்வியில் பாடத்திட்ட இயக்குநராகவும் திறம்படச் செயல்பட்டவர்.
(உ) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் மேற்பார்வையாளராகப் பணியாற்றியவர். அதன் தற்போதைய வளாக உருவாக்கத்திற்கான பணியில் முக்கியப் பங்காற்றியவர் முனைவர் தாஸ் அவர்கள். பல மாணவர்களைத் தமிழாசிரியர்களாகவும், தமிழ்சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்களாகவும் உருவாக்கிய பெருமைக்குரியவர்.
(ஊ) பள்ளித்துணை முதல்வராகவும், முதல் தலைமை முதன்மை ஆசிரியராகவும் பணியாற்றிய இவர், பல இளம் ஆசிரியர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். இந்தச் சாதனையாளர் விருது… சாதனையாளர் முனைவர் தாஸ் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளுக்கும் சேவைக்கும் தனித்திறனுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
(எ) முனைவர் தாஸ் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்வோம்.
21. சிங்கப்பூரில் தமிழ்மொழி நிலைபெறுவதற்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு அப்பாலும் மொழியைப் பயன்படுத்துவதற்கும் மூன்று அமைப்புகள் முக்கியப்பங்காற்றுகின்றன. வாழும் மொழியாகவும், வாழ்நாள் மொழியாகவும் தமிழைக் கொண்டுசெல்வது அனைவரின் கடமை.
22. தமிழ்முரசு, தமிழாசிரியர் சங்கம் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு எதிர்காலத்தைத் திட்டமிட்டு பாலர் முதல் மாணவர்கள், இளையர்கள், தமிழ்ச்சமூகத்தினர் அனைவரும் கையாளும் மொழியாக நாவில் தவழும் மொழியாகத் தமிழை வைத்திருக்கத் திட்டங்கள் தீட்டிச் செயல்படுவது அறிந்து மகிழ்கிறேன்.
23. அந்த வரிசையில் தமிழ்முரசு நமது சமூகத்தின் குரலாகத் திகழ்கிறது. சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் தமிழாசிரியர்களின் தொழில்சார்ந்த தேவையைப் பூர்த்திச்செய்ய முற்படுகிறது. தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு அனைத்திற்கும் துணைநின்று நிதி ஆதரவு வழங்கி பல்வேறு வகையில் முன்னெடுத்துச்செல்ல ஆதரவு அளிக்கிறது.
24. முத்தான இந்த மூன்று அமைப்புகளும் சமூக அமைப்புகளோடு ஒன்றிணைந்து, துணைநின்று, ஆதரவு வழங்கி தமிழ்நிலைபெற ஆற்றும் பணி பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியது. இது மேலும் முனைப்போடும் அக்கறையோடும் தொடரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். எதிர்வரும் தமிழ்முரசின் 90-வது பிறந்தநாளை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம்.
25. இந்த நல்லாசிரியர் விழா சிறக்க, பங்காற்றிய ஏற்பாட்டுக்குழுவுக்கும் ஆதரவு நல்கிய அன்பு உள்ளங்களுக்கும் அனைத்துச் சமூக அமைப்புகளுக்கும் தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
26. இந்த உன்னத விழாவில் விருதுபெற்றவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் மனமார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். தமிழ்மொழியை வாழும் மொழியாக நிலைபெறச்செய்வதற்குத் தமிழாசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை திடமாக உள்ளது.
27. இந்த அடிப்படையான, அவசியமான, ஆக்ககரமான பயணத்தை முன்னெடுப்பீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தமிழ் சமூகத்தின் விளைவுக்கு நீர், இளமைக்குப் பால், அசதிக்குச் சுடர்தந்த தேன், பிறவிக்குத் தாய் என்று பாரதிதாசன் முழங்கியதை உணர்ந்து நாம் ஒன்றுபடுவோம்; ஒன்றிணைவோம். தமிழை வாழும்மொழியாக நிலைபெறச் செய்யப் பாடுபடுவோம்.
28. நாவில் தமிழ்; நாளும் தமிழ்
29. நன்றி, வணக்கம்.